4577. | மாருதியும், மற்று அவள் மலர்ச்சரண் வணங்கி, 'யார் இந் நகருக்கு இறைவர்? யாது நின் இயற் பேர்? பார் புகழ் தவத்தினை! பணித்தருள்க!' என்றாள்; சோர்குழலும், மற்று அவனொடு, உற்றபடி சொன்னாள்; |
மாருதியும் - அனுமனும்; அவள் மலர் சரண் வணங்கி - அந்தச் சுயம்பிரபையின் தாமரைமலர் போன்ற அடியிணைகளைத் தொழுது; யார் இந்நகருக்கு இறைவர் - இந்த நகரத்துக்குத் தலைவர் யார்? நின் இயற் பேர் யாது - உனது இயற்கையான பெயர் என்ன?பார் புகழ் தவத்தினை - உலகத்தவர் புகழ்வதற்குக் காரணமான தவம் மேற்கொண்டவளே! பணித்து அருளுக - (இவற்றைச்) சொல்வாயாக; என்றான் - என்று கேட்டான்; சோர்குழலும் - (சடைபட்டுத்) தொங்கும் கூந்தலையுடைய அந்தச் சுயம்பிரபையும்; அவனோடு - அந்த அனுமனிடம்; உற்றபடி சொன்னாள் - நடந்தவற்றை நடந்தபடியே கூறலாயினாள். பணித்துஅருள்க என்ற தொடரில் அனுமனின் பணிபு புலப்படுதல் காண்க. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (125) பணிவுடையன் இன்சொலன் ஆதல் (95) என்ற குறள் தொடர்களுக்கு அனுமன் இலக்கியம் ஆவான். சோர்குழல்: வினைத் தொகையன்மொழி. 'மற்று' இரண்டும்அசைகள். 57 |