4580. | 'புணர்ந்து, அவளும் அன்னவனும், அன்றில் விழை போகத்து உணர்ந்திலர், நெடும் பகல் இம் மா நகர் உறைந்தார்; கணங் குழையினாளொடு உயர் காதல் ஒருவாது உற்று, இணங்கி வரு பாசமுடையேன் உடன் இருந்தேன். |
அவளும் அன்னவனும் - அந்தத் தேவமாதும், அந்த மயனும்; புணர்ந்து - கூடி (இன்பம் துய்த்து); அன்றில் விழை போகத்து - அன்றில் பறவையும் விரும்பும்படியான சிற்றின்பத்தில்; உணர்ந்திலர் - (வேறொன்றையும்) அறியாதவர்களாய்; நெடும்பகல் இம்மாநகர் - பலகாலம் இந்தப் பெரிய நகரத்தில்; உறைந்தார் - வசித்தார்கள்; கணங்குழையினாளொடு - திரண்ட காதணி பூண்ட அப் பெண்ணுடன்; உயர் காதல் ஒருவாது - சிறந்த அன்பு நீங்காது; உற்று இணங்கி வரு - நெருங்கிப் பழகி வருகின்ற; பாசம் உடையேன் - பாசமுடையவளாகிய நான்; உடன் இருந்தேன் - அந்தப் பெண்ணோடு இங்கேயே இருந்துவிட்டேன். மயனும், தேவமாதும் சிற்றின்பத்தில் மூழ்கி இங்கு வசிக்குங் காலத்தில் என் உயிர்த்தோழியான அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் நானும் அவளுடன் இருந்தேன் என்றாள் சுயம்பிரபை. பகல்: நாள்கள் - இலக்கணை. காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்ட இன்பமாதலின் 'உயர் காதல்' எனப்பட்டது. 60 |