4581. | 'இருந்து பல நாள் கழியும் எல்லையினில், நல்லோய்! திருந்திழையை நாடி வரு தேவர்இறை சீறி, பெருந் திறலினானை உயிர் உண்டு, ''பிழை'' என்று, அம் முருந்து நிகர் மூரல் நகையாளையும், முனிந்தான். |
நல்லோய் - நல்ல பண்புகள் உடையவனே; இருந்து - (இவ்வாறு அவர்கள் இருவரும்) கூடியிருந்து; பல நாள் கழியும் எல்லையினில் - பலநாள்கள் கழியும் பொழுதில்; திருந்து இழையை நாடி வரு - வேலைப்பாடு மிக்க அணிகளைப் பூண்ட அந்தத் தேவமாதைத் தேடி வருகின்ற; தேவர் இறை - தேவர் தலைவனாகிய இந்திரன்; சீறி - கோபித்து; பெருந் திறலினானை - மிக்க வல்லமை பொருந்திய அந்த மயனை; உயிர் உண்டு - கொன்று; அம்முருந்து நிகர் - அழகான மயிலிறகின் அடிக்குருத்தையொத்த; மூரல் நகையாளையும் - பற்களையும் புன்சிரிப்பையுமுடைய அந்தத் தெய்வப் பெண்ணையும்; பிழை என்று - (நீ செய்தது) தவறான செயலாகும் என்று; முனிந்தான் - சினந்து கூறினான். இவ்வாறு அவ் விருவரும் இந்த நகரத்தில் இன்பம் நுகர்ந்து பலநாட்கள் கழிக்க, வானுகலத்தில் அத்தேவமாதைக் காணாமையால் அவளைத் தேடி வந்த இந்திரன், அந்த ஏமையைக் கவர்ந்த காரணத்தால் அம் மயனைக் கொன்று, அவனுக்கு இணங்கிய அந்த ஏமையைக் கோபித்தான் என்பது. திருந்திழை: வினைத்தொகையன்மொழி. முருந்து: மயிலிறகின்அடி - பற்களுக்கு உவமை. 61 |