4582. | 'முனிந்து, அவளை, ''உற்ற செயல் முற்றும் மொழிக'' என்ன, கனிந்த துவர் வாயவளும் என்னை, ''இவள்கண் ஆய், வனைந்து முடிவுற்றது'' என, மன்னனும், இது எல்லாம் நினைந்து, ''இவண் இருத்தி; நகர் காவல் நின்னது'' என்றான். |
அவளை முனிந்து - (அந்தத் தேவமாதை இந்திரன்) அவ்வாறு கோபித்து; உற்ற செயல் முற்றும் மொழிக - நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கூறுக; என்ன - என்று கட்டளையிட; கனிந்த துவர் வாயவளும் - நன்றாக முற்றிய பவழம்போன்ற இதழையுடைய அந்த ஏமையும்; என்னை - என்னைப் பற்றிக் கொண்டு; இவள் கண்ணாய் வனைந்து - இவளால் (இப்பழிப்புச் செயல்) தொடுக்கப்பட்டு; முடிவுற்றது என - முடிந்ததெனத் தெரிவிக்க; மன்னனும் - இந்திரனும்; இது எல்லாம் நினைந்து - இவற்றையெல்லாம் நன்றாக ஆராய்ந்து (என்னைப் பார்த்து); இவண் இருத்தி - இந்த நகரிலேயே (தனியாக) தங்குவாய்; நகர் காவல் நினது - நகரத்தைப் பாதுகாக்கும் வேலை உன்னுடையது; என்றான் - என்று கூறினான். நடந்த செயலை என் தோழியாலறிந்த இந்திரன் எல்லாவற்றிற்கும் முதற் காரணம் நானே எனத் தெளிந்து என்மீதுள்ள கோபத்தால் ஒருவருமில்லாத இந்த நகரத்தைப் பாதுகாத்துத் தனியே இருக்குமாறு கட்டளையிட்டான் என்பது. மன்னன்: இந்திரன். 'வேந்தன் மேய தீம்புனல் உலகமும்' - தொல். பொருள். 5.62 |