4583. | என்றலும்; வணங்கி, ''இருள் ஏகும் நெறி எந் நாள்? ஒன்று உரை, எனக்கு முடிவு'' என்று உரைசெயாமுன், 'வன் திறல் அவ் வானரம், இராமன் அருள் வந்தால், அன்று முடிவு ஆகும், இடர்'' என்று அவன் அகன்றான். |
என்றலும் - என்று இந்திரன் எனக்குக் கட்டளையிட்டவுடனே; வணங்கி - (நான் அந்த இந்திரனைத்) தொழுது; இருள் ஏகும் நெறி எந்நாள்- என்னுடைய இத்துன்பம் நீங்குவதற்குரிய வழி எக்காலத்து உண்டாகும்? எனக்கு முடிவு ஒன்று உரை - என் துன்பத்திற்கு முடிவு காலம் ஒன்றைச்சொல்வாய்; என்று உரை செயாமுன் - என்று கேட்பதற்கு முன்னேயே; அவன் - அவ்இந்திரன்; வன் திறல் அவ்வானரம் - மிக்க வலிமையுடையவானரங்கள்; இராமன் அருள் வந்தால் - இராமனது கட்டளையால் இங்குவந்தால்; அன்று - அக்காலத்தில்; இடர் முடிவு ஆகும் - உனது துன்பம்ஒழியும்; என்று அகன்றான் - என்று சொல்லித் தன் நகருக்குச் சென்றான். நான் செய்த பிழைக்குத் தண்டனையாக என்னை இங்கே இருக்குமாறு தேவேந்திரன் கட்டளையிட்டவுடன், 'எனது துன்பம் நீங்கும் காலம் எப்போது' என்று நான் அவனைத் தொழுது கேட்டதற்கு அவனும், 'இராம தூதராகிய வானரர்கள் இங்கு வரும்பொழுது உனது துன்பம் நீங்கும்' எனச் சாபவிமோசனம் கூறிச் சென்றான் என்பது. இருள்: துன்பம் - இலக்கணை. 63 |