4584.'உண்ண உள; பூச உள;
      சூட உள; ஒன்றோ?
வண்ண மணி ஆடை உள;
      மற்றும் உள பெற்றேன்;
அண்ணல்! அவை முற்றும் அற
      விட்டு, வினை வெல்வான்,
எண்ண அரிய பல் பகல்
      இருந் தவம் இழைத்தேன்.

     அண்ணல் - பெருமை மிக்க அனுமனே!உண்ண உள - (எனக்கு
இங்கே) உண்பதற்குரிய (கனி முதலிய) பொருள்கள் உள்ளன; பூச உள -
பூசுவதற்குரிய கலவைச் சாந்து முதலிய பொருள்கள் உளளன; சூட உள -
தலையில் சூடுவதற்குரிய மலர்மாலைகள் முதலியன உள்ளன; ஒன்றோ -
இவைமட்டுந்தானா?வண்ண மணி ஆடை உள - நல்ல நிறத்தோடு கூடிய
அழகிய ஆடைகளும் உள்ளன; மற்றும் உள - (இவையேயல்லாமல்)
இன்னும் அணிகள் முதலியன யாவும் உள்ளன;  பெற்றேன் -
இவையனைத்தையும் நான் அடைந்துள்ளேன்; (என்றாலும்)
அவை முற்றும் அற விட்டு -
அவற்றைத் துய்க்காமல் எல்லாப்
பற்றுக்களையும் நீக்கி; வினை வெல்வான் - (என்) தீவினையை வெல்லும்
பொருட்டு; எண்ண அரிய பல்பகல் - எண்ணுவதற்கு அரிய நெடுங்காலமாக;
இருந்தவம் இழைத்தேன் -
பெருந்தவத்தைச் செய்தேன்.

     இன்பத்திற்குரிய பல பொருள்கள் இந் நகரில் இருந்தும், எனது சாபம்
நீங்குமாறு பல காலமாகப் பெருந்தவம் புரிந்து கொண்டிருந்தேன் என்று
சுயம்பிரபை கூறினாள் என்பது. ஓகாரம்: பிரிநிலை. அண்ணல்: அண்மைவிளி.
                                                           64