4585. | 'ஐ - இருபது ஓசனை அமைந்த பிலம், ஐயா! மெய் உளது; மேல் உலகம் ஏறும் நெறி காணேன்; உய்யும் நெறி உண்டு, உதவுவீர்எனின்; உபாயம் செய்யும்வகை சிந்தையில்நினைத்திர், சிறிது' என்றாள். |
ஐயா - பெரியவனே! அமைந்த பிலம் - பொருந்திய இக் குகைத் துவாரமானது; ஐ இருபது ஓசனை மெய் உளது - நூறு யோசனை விரிந்த வடிவு கொண்டது; மேல் உலகம் ஏறு நெறி காணேன் - வானுலகத்திற்கு ஏறிச் செல்லும் வழியை அறியேன்; உதவுவீர் எனின் - (நீங்கள் எனக்கு) உதவி செய்வீர்களென்றால்; உய்யும் நெறி உண்டு - (நான்) ஈடேறுவதற்கு வழிஏற்படும்; உபாயம் செய்யும் வகை - அதற்கான உபாயம் செய்யும் விதத்தை; சிந்தையில் சிறிது நினைத்திர் - உங்கள் மனத்தில் சிறிது கருதுங்கள்; என்றாள் - என்று கூறினாள் (சுயம்பிரபை). இந்தப் பிலம் நூறு யோசனை பரப்புள்ளதாய் இருள் அடர்ந்திருப்பதால் மேலே ஏறிச் செல்லும்வழி இதுவென் தெரியாதபடி இந்திரனது சாபம் என்னைத் தடை செய்கிறது; என் சாபவிடைக் காலம் குறுகி உங்கள் வருகையால் நான் ஈடேறும் வகையும் உள்ளது. ஆதலால், அவ்வாறான உபாயத்தைச் செய்ய வேண்டுமென்று அனுமன் முதலியோரைச் சுயம்பிரபை வேண்டினான் என்பது. 65 |