4589. | எருத்து உயர் சுடர்ப் புயம் இரண்டும் எயிறு என்ன, மருத்து மகன் இப்படி இடந்து, உற வளர்ந்தான்; கருத்தின் நிமிர் கண்ணின் எதிர் கண்டவர் கலங்க, உருத்து, உலகு எடுத்த கருமாவினையும் ஒத்தான். |
மருத்து மகன் - வாயு மகனான அனுமன்; எருத்து உயர் சுடர் புயம் இரண்டும் - பிடரியின் இருபுறமும் உயர்ந்த ஒளியையுடைய கைகள் இரண்டும்; எயிறு என்ன - இரண்டு வளைந்த தந்தம்போல விளங்க; நிமிர் கண்ணின் எதிர் - சிறந்த கண்ணெதிரே; கண்டவர் - நேரில் பார்த்தவர்; கருத்தின் கலங்க - நெஞ்சம் கலங்கும்படி; இப்படி இடந்து உற - இந்தப் பிலத்தின் மேல்தளத்தைப் பிளந்து கொண்டு; வளர்ந்தான் - உயர்ந்தவனாய்; உலகு உருத்து எடுத்து - பூமியை (அந்த நாளில்) சினங்கொண்டு (தன் கோரத் தந்தங்களால்) பாதலத்திலிருந்து தூக்கி வந்த; கரு மாவினையும் - பெரிய வடிவமுடைய கரிய வராகத்தையும்; ஒத்தான் - ஒத்து விளங்கினான். அனுமன், தன் இரு கைகளும் தந்தம் போல் விளங்க நிலத்துள்ளிருந்த பிலத்திலிருந்து பார்த்தவர் கலங்குமாறு நிலத்தைப் பிளந்து வெளிவந்த தோற்றத்தால், பாதலத்தில் அழுந்திக் கிடந்த பூமியைத் தன் கோரத் தந்தங்களால் குத்தி எடுத்துக் கொண்டு வெளிவந்த திருமாலின் வராக அவதார வடிவத்தைப் போன்றிருந்தான் என்பது. மா: விலங்கின் பொதுப்பெயர்; இங்கே வராகத்தைக் (பன்றி) குறித்தது. உருத்தல்:சினங்கொள்ளுதல். 69 |