பிலத்தின் மேற்பகுதியை மேலைக்கடலில் அனுமன் எறிதல்

4591. ஏழ் - இருபது ஓசனை
      இடந்து, படியின்மேல்
ஊழுற எழுந்து, அதனை,
      உம்பரும் ஒடுங்க,
பாழி நெடு வன்
     பிலனுள்நின்று, படர் மேல்பால்
ஆழியின் எறிந்து, அனுமன்
      மேகம் என ஆர்த்தான்.

     அனுமன் - அனுமன்; ஏழ்இருபது ஓசனை இடந்து - நூற்று நாற்பது
யோசனை தூரம் பிளந்துகொண்டு; பாழி நெடு வன் பிலனுள் நின்று -
உள்ளாழ்ந்த நெடிய வலிய பிலத்திலிருந்து; படியினிமல் ஊழ் உற எழுந்து -
பூமி மட்டத்திற்கு முறையே எழுந்துவந்து; (பின்பு)அதனை - அந்தப் பில
நகரத்தை; உம்பரும் ஒடுங்க - தேவர்களும் அஞ்சி நடுக்கமடைய;
படர்மேல்பால் ஆழியின் எறிந்து -
பரவிய மேற்குத்திசைக் கடலில்
வீசியெறிந்து; ஆழி என ஆர்த்தான் - அலை கடல்போலப் பேராரவாரம்
செய்தான்.

     அனுமன் பிலத்தைப் பிளந்து வெளிவந்து பயனில்லாமல் கிடந்த அந்தப்
பிலநகரத்தை மேற்குக் கடலிலெறிந்து ஆரவாரம் செய்தான் என்பது.
அனுமனின் அப்பொழுதைய நிலையைக் கண்டு தமக்கு என்ன தீங்குவருமோ
என்று தேவர்களும் அஞ்சி நடுங்குவாராயினர் என்றார்.  ஊழுற எழுந்து:
முறையாக வருத்தமில்லாமல் கிளம்பி.                           71