வானரர் பொய்கைக் கரை அடைதல்

4593.மாருதி வலித் தகைமை
      பேசி, மறவோரும்,
பாரிடை நடந்து, பகல்
      எல்லை படரப் போய்
நீருடை பொய்கையினின் நீள்
      கரை அடைந்தார்;
தேருடை நெடுந்தகையும் மேலை
      மலை சென்றான்.

     மறவோரும் - வலிமையுள்ள வானர வீரர்களும்; மாருதி வலித்த
கைமை பேசி -
அனுமனது வலிமையின் தன்மையைப் புகழ்ந்து கூறிக்
கொண்டு; பகல் எல்லை படர - அன்றைய பகல்முழுவதும்; பாரிடை
நடந்துபோய் -
பூமியில் நடந்து சென்று; நீருடைய பொய்கையினின் - நீர்
நிரம்பிய ஒரு தடாகத்தின்; நீள் கரை அடைந்தார் - நீண்ட கரையை
அடைந்து தங்கினார்கள் (அப்பொழுது); தேருடை நெடுந்த கையும் -
(வானத்தில் செல்லும்) தேரையுடைய பெருந்தகையான சூரியனும்; மேலை
மலை சென்றான் -
மேற்குத் திசையிலுள்ள அத்தமனகிரியை அடைந்தான்
(மறைந்தான்).

பிலத்தில் இருட்பிழம்பிலகப்பட்டுத் திகைத்த போது தங்களுக்கு வழிகாட்டிக்
காத்ததனாலும், பின்பு பிலத்தை இடித்துச் சுயம்பிரபைக்கும் தங்களுக்கும்
வெளியே செல்லும் வழியைக் காட்டியதாலும் வானர வீரர் அனுமனின்
வலிமையைப் புகழ்ந்தார்கள் என்பது.                              73