பொய்கைக் கரையில் வானரர் உறங்கும்போது துமிரன் வருதல்

கலித்துறை

4594. கண்டார், பொய்கைக் கண் அகல் நல்
      நீரைக் கரை தாம் உற்று,
உண்டார், தேனும் ஒண் கனி
      காயும்; ஒரு சூழல்,
கொண்டார் அன்றோ, இன்துயில்;
      கொண்ட குறி உன்னி,
தண்டா வென்றித் தானவன்
      வந்தான், தகவு இல்லான்.

     கண்டார் - (அப் பொய்கையைக்) கண்ட வானரவீரர்கள்; பொய் கைக்
கண் -
அந்தப் பொய்கையிலுள்ள; அகல்நீர்க் கரைதாம் உற்று -
நீர்வளமுள்ள அகன்ற கரையையடைந்து; தேனும் ஒண்கனி காயும் உண்டார்
-
தேனையும் நல்ல பழங்களையும் காய்களையும் தின்றார்கள்; ஒரு சூழல் -
அப் பொய்கையின் ஒரு பக்கத்தில்; இன்துயில் கொண்டார் - இனிய
உறக்கத்தை மேற்கொண்டார்கள்; கொண்ட குறி உன்னி -
(அவ்வாறு வானரர்கள் வந்து) படுத்துறங்குவதை அறிந்து; தண்டா
வென்றி -
குறையாத வெற்றியையுடைய; தகவு இல்லான் - நற்குணமில்லாத
ஓர் அசுரன்; வந்தான் - (அவ் இடத்திற்கு) வரலானான்.

     அன்று, ஓ : அசைகள். வானரவீரர்கள் தாங்கள் வந்து சேர்ந்த
பொய்கைக் கரையிலே காய்  கனி முதலியவற்றைத் தின்று ஆழ்ந்து உறக்கங்
கொள்ள, அப்போது ஓர் அசுரன் அதனை அறிந்து அங்கு வந்தான் என்பது.
தாக்குதற்கு ஏற்ற நேரம் எனக் கருதினான், அவ் அரக்கன். தானவர்:
அரக்கரின் வேறான அசுரர்.  இங்குக் கூறப்பெற்ற அசுரன் துமிரன் என்பவன்.
                                                            1