4595. மலையே போல்வான்; மால் கடல்
     ஒப்பான்; மறம் முற்ற,
கொலையே செய்வான்; கூற்றை
      நிகர்ப்பான்; கொடுமைக்கு ஓர்
நிலையே போல்வான்; நீர்மை
      இலாதான்; நிமிர் திங்கட்
கலையே போலும் கால
     எயிற்றான்; கனல் கண்ணான்;

     (அந்த அசுரன்) மலையே போல்வான் - (தோற்றத்தில்) மலையைப்
போன்றவன்; மால் கடல் ஒப்பான் - (உருவத்தின் நிறத்தாலும் பரப்பாலும்)
பெரிய கரிய கடலைப் போன்றவன்; மறம் முற்ற, கொலையே செய்வான் -
கொடுமையில் முதிர்ச்சியடைந்து யாவரையும் கொன்று தீர்ப்பவன்; கூற்றை
நிகர்ப்பான் -
இயமயையேஒத்திருப்பவன்; கொடுமைக்கு -
கொடுமையென்னும் குணத்திற்கு; ஓர் நிலையே போல்வான் - ஓர்
இருப்பிடமாவான்; நீர்மை இலாதான் - நற்பண்பு சிறிதும் இல்லாதவன்; நிமிர்
-
(வானில்) எழுந்து விளங்கும்; திங்கட் கலையே போலும் - சந்திரனின்
பிறை போல் விளங்கும்; கால எயிற்றான் - நச்சுப்போன்ற
பற்களையுடையவன்; கனல் கண்ணான் - (நெருப்புப் போன்று) கனல் கக்கும்
கண்களையுடைவன்.

     அந்த அசுரனின் உருவத்தின் வலிமை உயர்வு முதலியவற்றிற்கு
மலையும், நிறம், பெருமை விரிவு முதலியவற்றிற்குக் கடலும் உவமைகளாயின.
மால்: கருமை, பெருமைகளை உணர்த்தியது.  காலம்: கரியநஞ்சு.          2