கலிவிருத்தம் 4596. | கருவி மா மழைகள் கைகள் தாவி மீது உருவி, மேனி சென்று உலவி ஒற்றலால், பொரு இல் மாரி மேல் ஒழுகு பொற்பினால், அருவி பாய்தரும் குன்றமே அனான்; |
(அந்த அசுரன்)கருவி மாமழை - (உலகம் நடைபெறுவதற்கு) முதற்காரணமான பெரிய மேகங்கள்; கைகள் தாவி - அவன் கைகளில் தாவி; மீது உருவி மேனி சென்று - ஊடுருவி அவனது உடலில் சென்று; உலவி - உலாவி; ஒற்றலால் - படிதலாலும்; பொருவு இல்மாரி - ஒப்பில்லாத மழைநீர்; மேல் ஒழுகு பொற்பினால் - அவன் மேல் பெருகி வழிந்த அழகாலும்; அருவி பாய்தரும் - நீரருவிகள் பாய்ந்தோடி வரும்; குன்றமே அனான் - ஒரு மலையையொத்தவனானான். கருவி: காரணம். மின்னல் இடி முதலியவற்றோடு கூடி வருவதால் கருவி மழை என்பதைத் தொகுதியான பெரிய மேகம் எனவும் கொள்ளலாம். பழைய நூல்களில் இவ்வழக்கு உண்டு. (குறுந். 42, மணி. 17-92) அந்த அசுரனின் தோள்கள்மேலும் உடம்பின் மேலும் மேகங்கள் தவழ்ந்து பெருகுமாறு மழைநீரைப் பொழிவதால், மேகங்கள் தன்மேல் உலாவப் பெற்று நீரருவி பாயும் மலை அவனுக்கேற்ற உவமையாகும். சிலேடையணி. 3 |