4597.வானவர்க்கும், மற்று அவர் வலிக்கு நேர்
தானவர்க்குமே அரிய தன்மையான்;
ஆனவர்க்கு அலால் அவனொடு ஆட, வேறு
ஏனவர்க்கும் ஒன்று எண்ண ஒண்ணுமோ?

     வானவர்க்கும் - (அந்த அசுரன்) தேவர்களுக்கும்; அவர் வலிக்கு
நேர் தானவர்க்கும் -
அத் தேவரின் வலிமைக்கு ஒப்பான அசுரர்களுக் கும்;
அரிய -
வெல்லமுடியாத; தன்மையான்- வலிமையுடையவன்; ஆனவர்க்கு
அலால் -
(ஆகவே) அத்தகைய தேவர், அசுரர்களுக்கே யல்லாமல்;
அவனோடு ஆட -
அந்தக் கொடிய அசுரனை எதிர்த்துப் போரிட; வேறு
ஏனவர்க்கும் -
மற்றுமுள்ள எவராயினும்; ஒன்று எண்ண ஒண்ணுமோ -
சிறிதேனும் நினைக்க முடியுமோ? (நினைக்க முடியாது).

     மற்று: அசை. அந்த அசுரனோடு போர் செய்தல் தேவர்களுக்கும்,
அசுரர்களுக்குமே முடியாதென்றால் மற்ற யாரால் முடியும்? ஒருவராலும்
இவனோடு போர் செய்து வெல்லுவதை நினைக்கவும் முடியாது என்பது.
ஏனவர்:பிறர்.                                               4