அங்கதன் பதிலுக்கு அறைய, துமிரன் அலறி வீழ்தல்

4600. மற்று அம் மைந்தனும்
      உறக்கம் மாறினான்;
'இற்று இவன் கொலாம்
      இலங்கை வேந்து' எனா,
எற்றினானை, நேர்
      எற்றினான்;  அவன்
முற்றினான், இகற்கு
      ஆதி மூர்த்தியான்.

     மற்று - பிறகு; அம் மைந்தனும் - வலியவனான அந்த அங்கதனும்;
உறக்கம் மாறினான் -
தூக்கம் கலைந்தான்; இற்று இவன் - இத்தன்மையான
இவனே; இலங்கை வேந்து கொல் ஆம் எனா - இலங்கைக்க அரசனான
இராவணன் போலும் என்று கருதி; எற்றி னானை - (தன்னைத்)
தாக்கியவனான அந்த அசுரனை; நேர் ஏற்றினான் - எதிர்த்து அறைந்தான்;
இகற்கு ஆதி மூர்த்தியான் அவன் -
போர்த் திறத்திற்குரிய கடவுள் போன்ற
அவன்; முற்றினான் - உயிர் முடிவுற்று இறந்தான்.

     துமிரன் என்ற அவ் அசுரனால் அறையப்பட்ட அங்கதன்,
தூக்கத்திலிருந்து எழுந்து அவனை இராவணனென்று கருதி, அவனது
மார்பிலறைய, அந்த அசுரன் கீழே விழுந்து இறந்தான் என்பது. போர்த்திறம்
என்னும் பண்பிற்கே மூல வடிவம் போன்றவனெனத் துமிரனைக் கவிஞர்
உயர்த்திக் கூறுகிறார்.  முற்றுதல் - ஆயுள் முடிந்துஇறத்தல்.            7