4601. | இடியுண்டு ஆங்கண் ஓர் ஓங்கல் இற்றது ஒத்து, அடியுண்டான் தளர்ந்து அலறி வீழ்தலும், தொடியின் தோள் விசைத்து எழுந்து சுற்றினார், பிடியுண்டார் எனத் துயிலும் பெற்றியார். |
ஆங்கண் - அப்பொழுது; ஓர் ஓங்கல் - ஒரு மலை; இடி உண்டு இற்றது ஒத்து - இடியினால் தாக்கப்பட்டுத் தகர்ந்து விழுந்ததுபோல; அடி உண்டான் - அங்கதனால் அடியுண்ட அந்த அசுரன்; தளர்ந்து - சோர்வுற்று; அலறி வீழ்தலும் - வாய்விட்டு அலறிக் கொண்டு கீழே விழுந்ததும்; பிடியுண்டார் என - பேயினால் பிடிக்கப்பட்டார் போல; துயிலும் பெற்றியார் - ஆழ்ந்த தூக்கத்திலிருந்த வானர வீரர்கள்; தொடியின் தோள் விரைந்து - வளையணிந்த தோள்களை வேகமாக வீசிக்கொண்டு; எழுந்து - எழுந்து வந்து; சுற்றினார் - (அந்த அசுரனைச்) சூழ்ந்து கொண்டார்கள். இடி விழுந்த மலை சரிந்து அழிவதுபோல அங்கதனால் அறையுண்ட அசுரன் தரையில் சாய்ந்து உயிரொடுங்க வானரர்கள் அப்பொழுது எழுந்த ஆரவாரத்தினால் உறக்கம் நீங்கி எழுந்து கீழே விழுந்த அந்த அசுரனைச் சூழ்ந்து கொண்டனர் என்பது. தொடியின் தோள்கள்: வளையணிந்த தோள்கள்; வீரர்கள் தம் தோள்களில் வீர வளையணிதல் மரபு. நயம்: முன்பு அந்த அசுரனை 'மலையே போல்வான்' (4595) என உவமித்ததற்கேற்ப இங்கு அவன் அங்கதனால் அடியுண்டு விழுந்ததை இடியுண்டு விழுந்த மலை என்றார். 8 |