சாம்பவான் துமிரன் வரலாறு கூறுதல்

4603.'யான் இவன்தனைத் தெரிய எண்ணினேன்;
தூ நிவந்த வேல் துமிரன் என்னும் பே -
ரான், இவ் ஆழ் புனல் பொய்கை ஆளும் ஓர்
தானவன்' என, சாம்பன் சாற்றினான்.

     (அது கேட்டுச்) சாம்பன் - (அனுமனை நோக்கி) கரடிகளுக்குத்
தலைவனான சாம்பவான்; யான் இவன்தனை - நான் இந்த அசுரனைக்
குறித்து; தெரிய எண்ணினேன் - இன்னானென்று தெரிந்து கொள்ளும்படி
நினைத்துப் பார்த்தேன்; தூ நிவந்த வேல் - பகைவரது புலால் நிறைந்த
வேற்படையைத் தாங்கியுள்ள; துமிரன் என்னும் பேரான் - துமிரன் என்னும்
பெயரையுடையவன்; இவ் ஆழ்புனல் பொய்கை ஆளும் - ஆழ்ந்த
நீரையுடைய இந்தப் பொய்கையை ஆட்சி செய்கின்ற; ஓர் தானவன் - ஓர்
அசுரனாவான்; எனச் சாற்றினான் - என்று கூறினான்.

     திருமாலின் திரிவிக்கிரமாவதார காலத்தில் அவன் திருவடிகள் உலகில்
பரவியதைக் காணுமாறு சாம்பவான் பலமுறை பூமியை வலம் வந்தவனாதலால்
உலகத்திலுள்ள பல செய்திகளைத் தெரிந்திருத்தல் பற்றி அவன் இந்த
அசுரனைக் குறித்து இன்னானென்று வினவியறிந்திருந்தான் என்பது. தூ நிவந்த
வேல்: துமிரனது வேலின் வெற்றிச் சிறப்பைக் கூறுவது. தூ - புலால்.
அங்கதன் இத் துமிரன் என்னும் அசுரனைக் கொன்ற செய்தி வானரர் பிலம்
புகுவதற்குமுன் நிகழ்ந்த்தாகக் கூறும்வான்மீகம்.                      10