4609. | தசநவப் பெயர்ச் சரள சண்பகத்து, அசந அப் புலத்து அகணி நாடு ஒரீஇ, உசநவப் பெயர்க் கவி உதித்த பேர் இசை விதர்ப்ப நாடு எளிதின் எய்தினார். |
தசநவப் பெயர் - (அந்த வானர வீரர்கள்) தசநவம் என்ற பெய ரையுடைய; சரள சண்பகத்து - இனிய சண்பக மரங்களையுடையதும்; அசந அப்புலத்து அகணி - உணவையுண்டாக்கும் அழகிய விளை நிலங்களைக் கொண்ட மருத நிலங்களையுடையதுமாகிய; நாடு ஒரீஇ - வளநாட்டை விட்டு நீங்கி; உசநவப் பெயர்க் கவி உதித்த - உசுநஸ் என்னும் பெயரையுடைய சுக்கிரீவன் பிறந்த; பேர் இசை விதர்ப்ப நாடு - பெரும்புகழ் வாய்ந்த விதர்ப்பம் என்னும் நாட்டை; எளிதின் எய்தினார் - எளிதாகச் சென்று சேர்ந்தார்கள். தச நவம் (தசார்ணவம்) என்னும் நாடு சண்பகமரத் தொகுதிகளையும், நல்ல விளைச்சலைக் கொண்ட புலங்களையுமுடையது என்பது. சரளம்: இனிமை. அகணி: மருதநிலம். ஒருவி என்ற வினையெச்சம் திரிந்து அளபெடுத்தது. ஒரீஇ - சொல்லிசையளபெடை. உசநவன்: சுக்கிரீவன் பெயர்களுள் ஒன்று. 16 |