விதர்ப்ப நாட்டில் தேடுதல்

4610.வைதருப்ப மண்டலனில் வந்து புக்கு,
எய்து அருப்பம் அத்தனையும் எய்தினார்;
பெய் தருப்பை நூல் பிறழும் மேனியார்,
செய் தவத்துளார் வடிவின், தேடினார்.

     வைதருப்ப மண்டலனில் - (வானர வீரர்கள்) விதர்ப்பம் என்னும்
நாட்டில்; வந்து புக்கு - வந்து சேர்ந்து; எய்து அருப்பம் அத்தனையும் -
(அந்த நாட்டில்) பொருந்தின ஊர்கள் எல்லாவற்றையும்; எய்தினார் -
அடைந்தனர்; பெய் தருப்பை நூல் - பூண்டுள்ள தருப்பைகளினாலும்,
(மார்பிலணிந்துள்ள) பூணூலினாலும்; பிறழும் மேனியார் - விளங்கும்
உடம்பையுடையவர்களாகிய; செய் தவத்துளார் வடிவின் -  தவம் செய்யும்
முனிவரது வடிவைக் கொண்டு; தேடினார் - சீதையைத் தேடினார்கள்.

     விதர்ப்ப நாட்டையடைந்த வானர வீரர்கள் முனிவரது வடிவுகொண்டு
அங்குள்ள ஓரூரையும்விடாது புகுந்து சென்று சீதையைத் தேடினார்கள்
என்பது.  மனிதர்கள் வாழும் ஊர்களில் சென்று வானர வடிவுடன் தேடுதல்
இயலாதாகையால் விரும்பும் உருவம் கொள்ளும் அவ் வானர வீரர் விதர்ப்ப
நாட்டு ஊர்களில் சென்று தேடுகையில் சிறப்பு மிக்கதாய், ஐயத்திற்குச் சிறிதும்
இடந்தராத முனிவரது வடிவைக் கொண்டனர் என்பது அறியத் தக்கது.
வைதருப்பம்: தத்தி தாந்த நாமம். தருப்பை - தருப்பைப் புல்லால் திரித்த ஒரு
கயிறு; - இது முஞ்சி எனப்படும் அந்தணப் பிரமசாரிகள் முஞ்சியும் பூணூலும்
தரிப்பர்.  மண்டலம் - மண்டலன் (மண்தலன்) - ஈற்றுப்போலி.          17