4612. | உண்டு, அகத்துளார், உறையும் ஐம் பொறிக் கண்டகர்க்கு அருங் காலன் ஆயினார், தண்டகத்தையும் தடவி ஏகினார்; முண்டகத்துறை கடிது முற்றினார். |
உண்டு அகத்துள் ஆர் உறையும் - புலன்களைத் துய்த்துக் கொண்டு உடம்பினுள் பொருந்தி வசிக்கின்ற; ஐம் பொறிக் கண்ட கர்க்கு - ஐந்து இந்திரிய உணர்ச்சிகளாகிய (முள் போன்ற) கொடியவர்களுக்கு; அருங் காலன் ஆயினார் - கொடிய யமன் போன்றவர்களாகிய முனிவர்கள் வசிக்கின்ற; தண்டகத்தையும் தடவி - அந்தத் தண்டக வனத்தையும் தேடிப் பார்த்து; ஏகினார் - (அங்கும் சீதையைக் காணாமல்) அந்த இடத்தை விட்டு நீங்கிய அவ் வானர வீரர்கள்; முண்டகத் துறை - முண்டகத் துறை யென்னும் இடத்தை; கடிது முற்றினார் - விரைவாகச் சென்று சேர்ந்தார்கள். ஐம்பொறிகள், ஆன்மாவை நற்கதியில் சேரவொட்டாது துன்புறுத்து வதால் அவற்றைக் 'கண்டகர்' என்றார். கண்டகர்: முள்போன்ற கொடியோர். ஐம்பொறிக் கண்டகர்க்கு அருங்காலனாயினார்: ஐம்பொறிகளுக்குக் கூற்றுவன் ஆனவர். அஃதாவது, மனத்தை நல்வழியிற் செல்லவொட்டாது தடுத்து ஐம்புலன்களிற் செல்லுமாறு இழுக்கின்ற ஐம்பொறிகளை அவ்வாறு செய்யவொட்டாது தடுத்துத் தம் வசமாக்கி மனத்தைச் சீவான்மா பரமான்மா தியானங்களில் செலுத்தும் வல்லமையுடையவர்; ஜிதேந்திரியர் எனப்படுவர். முண்டகத் துறை: தாமரை முதலிய பூக்கள் நிறைந்து விளங்கும் நீர்த் துறையையுடைய ஒருசூழல். 19 |