4613. | அள்ளல் நீர் எலாம், அமரர் மாதரார், கொள்ளை மா முலைக் கலவை, கோதையின் கள்ளு, நாறலின், கமல வேலி வாழ் புள்ளும், மீன் உணா, புலவு தீர்தலால் |
அள்ளல் நீர் எலாம் - (அந்த முண்டகத் துறையில்) சேற்றோடு கலந்த நீரெல்லாம்; அமரர் மாதரார் - அங்கு வந்து நீராடும் தேவ மாதர்களின்; கொள்ளை மா முலை - மிகப் பெரிய முலைகளில் பூசப் பட்ட; கலவை - மிகுதியான கலவைச் சாந்தும் கலத்தலால்; கோதை யின் கள்ளு நாறலின் - மலர் மாலைகளும் நறுமணம் கமழப் பெற்ற மையால்; கமல வேலி வாழ் - அந்த முண்டகத் துறையில் வசித்துவந்த; புள்ளும் - பறவைகளும்; புலவு தீர்தலால் - (மீன்களின் மேலுள்ள) புலால் நாற்றம் நீங்கியதால்; மீண் உணா- அம்மீன்களைப் புசிப்ப தில்லை. அந்த முண்டகத் துறையில் வந்து நீராடுகின்ற தேவமாதர்களின் முலைகளில் பூசியிருந்தத கலவைச் சந்தனமும், மலர் மாலைகளும் அந்நீர்த் துறையில்படிதலால், அங்குள்ள மீன்களும் அந்தக் கலவை, மலர்களின் நறுமணத்தை அடைந்து தமது புலால் வாசனை நீங்கப் பெறுகின்றன. அதனால் அங்கு வாழும் நாரை முதலிய நீர்ப் பறவைகள் புலால் மணம் கமழாத அம் மீன்களை உண்ணமாட்டா என்பது. அம் முண்டகத்துறை திரள்திரளாகத் தேவமாதர் பலர் வந்து படியப் பெற்ற சிறப்பு வாய்ந்தது. கொள்ளை - மிகுதி; கமலவேலி - முண்டகத்துறை; 20 |