4615. | கமுக வார் நெடுங் கனக ஊசலில், குமுத வாயினார், குயிலை ஏசுவார்; சமுக வாளியும், தனுவும் வாள் முகத்து அமுத பாடலார், மருவி ஆடுவார். |
குமுத வாயினார் - செவ்வாம்பல் மலர் போன்ற வாயையுடை யவர்களும்; குயிலை ஏசுவார் - (தமது குரலால்) குயிலைப் பழிப் பவர்களும்; சமுக வாளியும் - கூட்டமான அம்புகள் போன்ற கண் களையும்; தனுவும் - வில்லைப் போன்ற புருவங்களையும் கொண்ட; வாள் முகத்து - ஒளி பொருந்திய முகங்களையுடைய; அமுத பாடலார் - அமிழ்தம் போன்ற இனிய பாடல்களைப் பாடுகின்றவர்களான மகளிர்; கமுக வார் நெடுங் கனக ஊசலில் - பாக்கு மரங்களில் கட்டப்பட்ட நீண்ட பொன்னூஞ்சல்களில்; மருவி ஆடுவார் - பொருந்தி ஆடி மகிழ்வார்கள். அங்கே பாக்குமரங்களில் கட்டப்பட்டுள்ள பொன்னூஞ்சல்களில் மகளிர் மனமகிழ்ந்து ஆடுவாரென அந்த இடத்தின் அமைதியான சூழல் வருணிக்கப் பெற்றது. தனு: மகளிர் புருவத்திற்கு வடிவம் தொழிலும் பற்றிய உவமை. வாளி, தனு: உவமவாகு பெயர்கள். உருவக உயர்வுநவிற்சியணி. 22 |