4616. இனைய ஆய ஒண்  துறையை எய்தினார்;
நினையும் வேலைவாய் நெடிது தேடுவார்;
வினைய வார் குழல் திருவை மேவலார்;
புனையும் நோயினார், கடிது போயினார்.

     இனைய ஆய - இத் தன்மையதான; ஒண் துறையை - அழகிய
முண்டகத் துறையை; எய்தினார் - அடைந்தனர்; நினையும் வேலை வாய் -
நினைக்கும் நேரத்திற்குள்; நெடிது தேடுவார் - வெகுதூரமாகத் தேடினர்;
வினைய வார் குழல் திருவை -
ஐவகையாக அணி செய்யத் தக்க நீண்ட
கூந்தலையுடைய திருமகளான சீதையை; மேவலார் - காணப்பெறாமல்;
புனையும் நோயினார் -
அதனால் ஏற்பட்ட துன்பத்தையுடையவராய்; கடிது
போயினார் -
விரைவாக (அப்பால் தேடச்) சென்றார்கள்.

     முண்டகத் துறை முழுவதும் சீதையைத் தேடி அங்குக் காணாமையால்
வானர வீரர்கள் அப்பாற் செல்லலாயினர் என்பது.  வினைய வார்குழல்: முடி,
குழல், தொங்கல், பனிச்சை, சுருள் ஆகிய ஐவகைத் தொழிலுக்குரிய கூந்தல்.
வேலை - வேளை என்பதன் திரிபு.                              23