4618. | இருள் உறுத்து மீது எழுந்த தெண் நிலா, மருள் உறுத்து, வண் சுடர் வழங்கலால், அருள் உறுத்திலா அடல் அரக்கன்மேல் உருள் உறுத்த திண் கயிலை ஒத்ததால். |
இருள் உறுத்து - (அந்தப் பாண்டு மலை) (உலகில்) பரவிய இருட்டைத் தாக்கியொழித்து, மீது எழுந்த - வானத்தில் தோன்றிய; தெண் நிலா - தெளிந்த ஒளியையுடைய சந்திரனுக்கு; மருள் உறுத்து - மயக்கத்தை உண்டாக்கி; வண்சுடர் வழங்கலால் - செழுமையான மிக்க ஒளியை வீசுவதால்; அருள் உறுத்திலா - (மனத்தில் சிறிதும்) அருளைக் கொள்ளாத; அடல் அரக்கன்மேல் - வலிய அரக்கனான இராவணன்மீது; உருள் உறுத்த- (அவன் கீழே விழுந்து) உருளுமாறு அழுத்திய; திண் கயிலை - வலியகயிலாய மலையை; ஒத்தது - ஒத்து விளங்கியது. ஆல்: ஈற்றசை. தன் வெண்ணிலவால் உலகத்து இருளைப் போக்கும் சந்திரனுக்கும் மயக்கத்தையுண்டர்க்குவதெனப் பாண்டு மலையின் வெண்ணிறவொளியைச் சிறப்பித்துக் கூறியது. இவ்வாறு வெள்ளொளி மிகுந்திருப்பதால் பாண்டுமலைக்குக் கைலாய மலையை உவமை கூறினார். கயிலைக்கு ஏற்றங் கூறிய ஆசிரியர் வலிய அரக்கனும், இந்தச் சரிதத் தொடர்பான கொடியவனுமான இராவணனைத் தன் கீழே கிடத்தி அழுத்திய மலையெனச் சிறப்பித்த நயங் காணலாம். 25 |