அறுசீர் ஆசிரிய விருத்தம்

4619.விண் உற நிவந்த சோதி
      வெள்ளிய குன்றம் மேவி,
கண்ணுற நோக்கலுற்றார், களி
      உறக் கனிந்த காமர்
பண் உறு கிளவிச் செவ்
      வாய், படை உறும் நோக்கினாளை,
எண்ணுறு திறத்தும் காணார்; இடர்
      உறும் மனத்தர் எய்த்தார்.

     (வானர வீரர்)விண் உற நிவந்த - வானத்தைப் பொருந்தும்படி
உயர்ந்த; சோதி - ஒளியையுடைய; வெள்ளிய குன்றம் மேவி -
வெண்ணிறமான அந்தப் பாண்டுமலையைப் பொருந்தி; கண்ணுற
நோக்கலுற்றார் -
(அங்கே) சீதையைக் காண்பதற்கு ஆர்வத்தோடு தேடத்
தொடங்கியவர்களாகிய; களி உற - மகிழ்ச்சியடையுமாறு; கனிந்த - முற்றிய;
காமர் பண் உறு -
விரும்பத் தகுந்த இசைப் பாடல் போன்ற; கிறவிச்
செவ்வாய் -
இனிய சொற்களைப் பேசும் சிவந்த வாயையும்; படை உறும்
நோக்கினாளை -
வேற்படை போன்ற கண்களையுமுடைய சீதையை;
எண்ணுற திறத்தும் -
தாம் கருதிப் பார்த்த இடங்களிலெல்லாம்; காணார் -
காணவில்லை; இடர் உறு மனத்தர் - துயரம் பொருந்திய
மனத்தையுடையவராய்; எய்த்தார் - தளர்வுற்றார்கள்.

     காமர்: காமம் மரு என்பதன் மரூஉ. உறு: (இங்கே) உவமவுருபு. அந்தப்
பாண்டுமலையின் பல இடங்களில் தேடியும் சீதையைக் காணாமையால் அவ்
வானரவீரர்கள் தளர்ந்தார்கள் என்பது.                             26