கோதாவரியை அடைதல் 4620. | ஊதைபோல் விசையின், வெங் கண் உழுவை போல் வயவர், ஓங்கல் ஆதியை அகன்று செல்வார்; அரக்கனால் வஞ்சிப்புண்ட சீதை போகின்றாள் கூந்தல் வழீஇ வந்து, புவனம் சேர்ந்த கோதைபோல் கிடந்த கோதாவரியினைக் குறுகிக் சென்றார். |
ஊதைபோல் விசையின் - காற்றைப் போல வேகத்தைக் கொண்ட; வெங் கண் - (சினத்தால்) கொடுமையான பார்வையுடைய; உழுவைபோல் வயவர் - புலிபோன்ற வலிமையுள்ள அந்த வானர வீரர்; ஓங்கல் ஆதியை - அந்தப் பாண்டு மலையின் அடிவாரத்தை; அகன்று செல்வார் - நீங்கி அப்பாலே செல்பவர்களாகி; அரக்கனால் வஞ்சிப்பு உண்ட - இராவணனால் வஞ்சித்துக் கவரப்பட்டு; சீதை போகின்றாள் - செல்லுகின்ற சீதையினது; கூந்தல் வழீஇ வந்து - கூந்தலிலிருந்து நழுவி வந்து; புவனம் சேர்ந்த - பூமியையடைந்த; கோதை போல் கிடந்த - மலர்மாலை போல விளங்கிய; கோதாவரியினை - கோதாவரி என்னும் ஆற்றை; குறுகிச் சென்றார் - நெருங்கிச் சேர்ந்தார்கள். உயரமான இடத்திலேறிக் காண்பவர்க்கு ஆறுகள் வெண்மையான மலர் மாலைபோலத் தோன்றுமாதலால் கோதாவரி நதியை இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவளது கூந்தலிலிருந்து நழுவிக் கீழே விழுந்த மலர் மாலை போலுமென்று வருணித்தார். ஊதை: சீறி வீசுவதால் வேகத்திற்கு உவமை. வழீஇ: சொல்லிசையளபெடை. 27 |