சுவணகத் துறை கடந்து குலிந்த நாட்டைக் கடத்தல் 4623. | அந் நதி முழுதும் நாடி, ஆய் வளை மயிலை, யாண்டும் சந்நிதி உற்றிலாதார், நெடிது பின் தவிரச் சென்றார்; 'இன்ன தீதுஇலாத, தீது' என்று யாவையும் எண்ணும் கோளார், சொன்ன தீவினைகள் தீர்க்கும் சுவணகத் துறையில் புக்கார். |
இன்ன தீது இலாத - இன்னது நல்லது; (இன்ன) தீது என்று - இன்னது கெட்டது என்று; யாவையும் எண்ணும் கோளார் - எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் தன்மையுடைய வானரவீரர்; அந் நதி முழுதும் நாடி - அந்தக் கோதாவரி நதிப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்து; ஆய்வளை மயிலை - சிறந்த வளையல்களையணிந்த மயில் போன்ற சீதையை; யாண்டும் சந்நிதி உற்றிலாதார் - எதிரில் காணப் பெறாத அவர்கள்; நெடிது பின் தவிரச் சென்றார் - நீண்ட வழி பின்னால் கழியுமாறு முன்னேறிச் சென்றவர்களாய்; சொன்ன தீவினைகள் - நூல்களில் கூறிய பாவங்களையெல்லாம்; தீர்க்கும் சுவணகத் துறையில் - (தன்னில் படிவோர்க்குப்) பாவத்தைப் போக்குகின்ற சுவணக (சோணை) நதியிடத்தில்; புக்கார் - சென்று சேர்ந்தார்கள். ஆய்வளை மயில்: அடையடுத்த உவமையாகுபெயர். சந்நிதி: வடசொல்லின் திரிபு - எதிரேகாணல், சுவணகம்: ஒரு நதி; சோணம், சோணை எனவும் வழங்கப் பெறும். 30 |