4624.சுரும்பொடு தேனும், வண்டும்,
     அன்னமும், துவன்றி; புள்ளும்,
கரும்பொடு செந் நெல் காடும்,
      கமல வாவிகளும், மல்கி;
பெரும் புனல் மருதம் சூழ்ந்த
      கிடக்கை பின் கிடைக்கச் சென்றார்;
குரும்பை நீர் முரஞ்சும் சோலைக்
      குலிந்தமும், புறத்துக் கொண்டார்.

     சுரும்பொடு தேனும் வண்டும் - பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு
என்னும் பலவகையான வண்டுகளும்; அன்னமும் - அன்னப் பறவைகளும்;
துவன்றி -
நெருங்கி; புள்ளும் - நாரை முதலான ஏனைய பறவைகளும்;
கரும்பொடு -
கரும்புகளும்; செந்நெல் காடும் - செந்நெற் பயிர்களும்
அடர்ந்த நன்செய் இடங்களும்; கமல வாவிகளும் - தாமரைத் தடாகங்களும்;
மல்கி -
நிறைந்து; பெரும்புனல் மருதம் சூழ்ந்த - மிக்க நீர்வளங் கொண்ட
மருதநிலம் சூழ்ந்துள்ள; கிடக்கை பின் கிடக்க - இடங்கள் தம் பின்னால்
கிடக்கும்படி; சென்றார் - அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்;
நீர்க் குரும்பை -
இளநீர்க் காய்கள்; முரஞ்சும் சோலைக் குலிந்தமும் -
நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும்; புறத்துக்
கொண்டார் -
(தமது) பின்புறத்ததாகும்படி முன்னேறிச் சென்றார்கள்.

     மருதநில: அன்னம் முதலிய பறவைகளையும், செந்நெல் முதலிய உணவு
வகைகளையும் தாமரை மலர்களையும், பொய்கைகளையும் தன்னிடத்தே
கொண்டது; வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் ஆகும்.  சுரும்பு,
தேன், வண்டு: வண்டுகளின் வகைகளைக் குறிக்கும் சொற்கள்; சுரும்பு; எல்லா
மணத்திலும் செல்வது எனவும் தேன், வண்டு: நன்மணத்தே செல்வன எனவும்
கூறுவர்.  இச் செய்யுளில் நிலம், நீர், பூ, பறவை, மரம் முதலியவற்றால்
குவிந்த நாட்டின் மருத

வளம் கூறப் பெற்றது.  குரும்பை: தெங்கு, பனை ஆகிய மரங்களின்
இளங்காய் குலிந்தம்: இக் குலிந்ந நாடு கேரள நாட்டின் வடக்கே
மேற்கடற்கரையையடுத்துள்ளதாகவும் பழைய ஐம்பத்தாறு நாடுகளுள்
ஒன்றெனவும்கூறுவர்.                                          31