அருந்ததி மலை, மரகத மலைகளைக் கடந்து வேங்கட மலை சேர்தல் 4625. | கொங்கணம் ஏழும் நீங்கி, குட கடல் தரளக் குப்பைச் சங்கு அணி பானல் நெய்தல் - தண் புனல் தவிர ஏகி, திங்களின் கொழுந்து சுற்றும் சிமய நீள் கோட்டுத் தேவர் அங்கைகள் கூப்ப, நின்ற அருந்ததிக்கு அருகர் ஆனார். |
கொங்கணம் ஏழும் நீங்கி - (அந்த வானர வீரர்) கொங்கண நாட்டின் ஏழு பிரிவுகளையும் கடந்து; குடகடல் - மேற்குக் கடலில் உண்டான; தரளக் குப்பை - முத்துக் குவியல்கள்; சங்கு - சங்குகள்; அணிபானல் - அழகான கருங்குவளை மலர்கள்; நெய்தல் - நெய்தற் பூக்கள்; தண்புனல் தவிர ஏகி - ஆகியவை நிறைந்த குளிர்ந்த நீர்ப் பகுதிகளையுடைய நெய்தல் நிலத்தை நீங்கிச் சென்று; திங்களின் கொழுந்து சுற்றும் - பிறைச் சந்திரன் சுற்றிச் செல்லக்கூடிய; சிமய நீள் கோடு - சிகரங்களையுடைய உயரமான கொடுமுடிகளைக் கொண்டதும்; தேவர் அங்கைகள் கூப்ப நின்ற - தேவர்கள் தம் அழகிய கைகளைக் குவித்து வணங்கும்படி நிற்பதுமான; அருந்ததிக்கு - அருந்ததி என்னும் மலைக்கு; அருகர் ஆனார் - அருகில் போய்ச் சேர்ந்தார்கள். வானரவீரர்கள் ஏழு பிரிவுகளையுடைய கொங்கண தேசத்தையும், மேற்குத் திசையிலுள்ள நெய்தல் நிலங்களையும் தாண்டி மிக உயர்ந்துள்ள அருந்ததிமலையைச் சேர்ந்தார்கள் என்பது. கொங்கணம்: மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த வடகன்னடம் என்னும் மாவட்டத்தது. தேவர் அங்கைகள் கூப்ப நின்ற அருந்ததி: உயர்வு நவிற்சியணி. 32 |