4626. | அருந்ததிக்கு அருகு சென்று, ஆண்டு அழகினுக்கு அழகு செய்தாள் இருந்த திக்கு உணர்ந்திலாதார் ஏகினார்; இடையர் மாதர் பெருந் ததிக்கு அருந் தேன் மாறும் மரகதப் பெருங் குன்று எய்தி, இருந்து, அதின் தீர்ந்து சென்றார், வேங்கடத்து இறுத்த எல்லை -. |
அருந்ததிக்கு அருகு சென்று - (அவ் வானர வீரர்) அருந்ததி மலைக்குப் பக்கத்திற் சென்று; ஆண்டு - அந்த இடத்தில்; அழகினுக்கு அழகு செய்தாள் - அழகுக்கும் அழகை உண்டாக்கக் கூடியவளான சீதை; இருந்த திக்கு - இருந்த இடத்தை; உணர்ந்திலாதார் - அறிய முடியாதவர்களாய்; ஏகினார் - அந்த இடம் விட்டுச் சென்று; இடையர் மாதர் - இடைப் பெண்கள்; பெருந் ததிக்கு - (தங்களது) சிறப்பான தயிருக்கு; அருந்தேன் மாறும் - மலைவாணர் சேகரித்த அருமையான மலைத்தேனைப் பண்டமாற்றாகக் கொள்ளும்; பெருங்குன்று எய்தி யிருந்து - மரகதமலையென்னும் பெரிய மலையை அடைந்து அங்கே தங்கியிருந்து; அதில் தீர்ந்து - (அங்கும் சீதையைக் காணாமல்) அதை விட்டு நீங்கி; இறுத்த எல்லை - (தமிழ் நாட்டின்) வரையறுக்கப் பெற்ற வடக்கு எல்லையாகிய; வேங்கடத்து - திருவேங்கட மலையினிடத்து; சென்றார் - சென்று சேர்ந்தார்கள். அழகினுக்கு அழகு செய்தாள்: இயற்கையில் நற்பண்புகள் மிகுந்து நல்லிலக்கணத்தில் குறைவில்லாத தன்னை அழகு சேர்ந்திருப்பதால் தான் அந்த அழகுக்குச் சிறப்பையுண்டாக்கியிருக்கிறாள் என்பது. மரகதமலைக்குப் பக்கத்தே முல்லை நிலத்து இடைச்சியர் மரகதமலை மேலுள்ள குறிஞ்சி நிலப் பெண்களிடம் தயிரைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தேனைப் பெற்றுக் கொள்கின்றனர் என்பதில் குறிஞ்சி, முல்லையுமாகிய இரண்டு திணை மயங்கினமை கூறியவாறு காண்க. 33 |