4627. | முனைவரும், மறை வலோரும், முந்தைநாள் சிந்தை மூண்ட வினை வரும் நெறியை மாற்றும் மெய் உணர்வோரும், விண்ணோர் எனைவரும், அமரர் மாதர் யாவரும், சித்தர் என்போர் அனைவரும், அருவி நல் நீர் நாளும் வந்து ஆடுகின்றார். |
முனைவரும் - (வேங்கடமலையில்) மாமுனிவர்களும்; மறை வலோரும் - வேதமறிந்த அந்தணர்களும்; முந்தை நாள் - முற்பிறப்பிலே; சிந்தை மூண்ட - மனம் மேலிட்டுச்செய்த; வினைவரும் நெறியை மாற்றும் - தீவினைகளின் பயனாகத் தொடர்ந்து வரும் அல் வழியை மாற்றி நல்வழியில் திருப்பவல்ல; மெய் உணர்வோரும் - தத்துவ ஞானிகளும்; விண்ணோர் எனைவரும் - தேவர்கள் எல்லோரும்; அமரர் மாதர் யாவரும் - தெய்வப் பெண்0கள் யாவரும்; சித்தர் என்போர் அனைவரும் - தேவரில் ஒரு வ0கையினரான சித்தர்கள் எல்லோரும்; அருவி நல்நீர் - (அம் மலையிலுள்ள) அருவியின் தூய்மையான புண்ணிய தீர்த்தங்களில்; நாளும் - ஒவ்வொரு நாளும்; வந்து ஆடுகின்றார் - வந்து நீராடுகின்றார்கள். முனிவர் முதலான இவ்வுலகத்தவரும், தேவகணங்களாகிய மேலுலகத்தவரும் வந்து நீராடுவதற்குரிய பெருமை மிக்க அருவிகளாலாகிய பல புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டுள்ளது திருவேங்கடமலையென்பது அங்குள்ள தீர்த்தங்கள்: கோனேரி, ஆகாய கங்கை, பாபவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமாரதாரை, தும்புரு தீர்த்தம், ஆழ்வார் தீர்த்தம் ஆகியன. சித்தர்: பதினெண்கணத்துத் தேவர்களில் ஒரு வகையினர். 34 |