4629. | வலம் கொள் நேமி மழை நிற வானவன் அலங்கு தாள் இணை தாங்கிய அம் மலை விலங்கும் வீடு உறுகின்றன; மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு அனையது பொய்க்குமோ? |
வலம் கொள் நேமி - வெற்றி கொள்ளும் சுதரிசனம் என்ற சக்க ராயுதத்தைக் கையில் கொண்ட; மழை நிற வானவன் - கார் மேகம் போன்ற கருநிறத்தையுடைய கடவுளான திருவேங்கடவனது; அலங்கு தாள் இணை - விளங்குகின்ற இரண்டு திருவடிகளையும்; தாங்கிய - தாங்கி நின்ற; அம்மலை - அத் திருவேங்கடமலையில் வாழ்கின்ற; விலங்கும் - மிருகங்களும்; வீடு உறுகின்றன - மோட்சத்தையடைகின் றன (அவ்வாறானால்); மெய்ந் நெறி புலன் கொள்வார்கட்கு - உண்மை நெறியான தவ நியமங்களில் தன் மனத்தைச் செலுத்தும் யோகியர் முதலோர்க்கு; அனையது - அந்த மோட்சமானது; பொய்க்குமோ- கிடைக்காமல் தவறிப் போகுமோ? (தவறிப் போகாது). மிகப் பெருஞ்சிறப்பு வாய்ந்த அத் திருவேங்கட மலையில் வாழும் மிருகங்களும் வீட்டுலகத்தையடையுமென்றால் தவவொழுக்கங்களில் நடக்கின்ற யோகியர் முதலோர்க்கு அந்த வீட்டுலகம் கிடைப்பது தவறுமோ என்பது. விலங்கும்: உம்மை இழிவுசிறப்பு. திருவேங்கடமலை வீட்டுப் பதவியைத் தவறாது அளிக்கவல்லதாகையால்தான் 'எம்பெருமான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' (பெருமாள் திருமொழி 4 : 10) என்றார் குலசேகராழ்வார். 36 |