4632. | குன்று சூழ்ந்த கடத்தொடும், கோவலர் முன்றில் சூழ்ந்த படப்பையும், மொய் புனல் சென்று சூழ்ந்த கிடக்கையும், தெண் திரை மன்று சூழ்ந்த பரப்பும் - மருங்கு எலாம். |
மருங்கு எலாம் - (அத் தொண்டை நாட்டின்) இடங்களெல்லாம்; குன்று சூழ்ந்த கடத்தொடும் - மலைகள் சூழ்ந்த சாரல்களும் (குறிஞ்சியும்); கோவலர் மூன்றில் - இடையர்களின் முற்றங்களை; சூழ்ந்த படப்பையும் - சூழ்ந்துள்ள தோட்டங்களும் (முல்லை நிலமும்); மொய் புனல் சென்று சூழ்ந்த - மிக்க நீர்சுற்றிலும் பாய்ந்து நிறைந்துள்ள; கிடக்கையும் - இடங்களான மருத நிலங்களும்; தெண் திரை - தெளிந்த அலைகளையுடைய; மன்று சூழ்ந்த பரப்பும் - மணல் வெளியான இடங்கள் சூழ்ந்த நெய்தல் நிலமும் (உள்ளன). வினை முற்று (உள்ளன) வருவித்து முடிக்கப்பட்டது. இதனால் அத்தொண்டை நாடு நால்வகை நிலங்களும் கொண்டிருத்தலைக் கூறினார். கோவலர்: பசுக்களை மேய்த்துக் காப்பவர். படப்பை : வரகு முதலியன விளைதற்குரிய தோட்டம். மன்று: வெளியான இடம். முன்றில் : இலக்கணப் போலி. 39 |