4633. | சூல் அடிப் பலவின் சுளை தூங்க தேன், கோல் அடிப்ப வெரீஇ, குல மள்ளர் ஏர்ச் சால் அடித் தரும் சாலியின் வெண் முளை, தோல் அடிக் கிளை அன்னம், துவைப்பன. |
குல மள்ளர் - வேளாண் குலத்தவராய உழவர்கள்; கோல் அடிப்ப - உழும்போது உழவு எருதுகளைக் கோலினால் அடிக்கையில்; தோல் அடிக் கிளை அன்னம் - தோல் செறிந்த அடிகளையுடைய கூட்டமான அன்னப் பறவைகள்; வெரீஇ - அஞ்சி; சூல் அடிப் பலவின் - கருவை அடியிலே கொண்ட பலாமரத்தினது (வேர்ப்பலாவின்); சுளை தூங்கு தேன் - (பலாச்) சுளையிலிருந்து ஒழுகுகின்ற தேன் (பாய்ந்து); ஏர்ச்சால் அடித்தரும் - உழவுச் சாலின் இடங்களிலே முளைத்துள்ள; சாலியின் வெண்முளை - நெற்பயிரின் வெண்மையான முளைகளை; துவைப்பன - (கால்களால்) மிதித்துத் துவைப்பனவாம். உழவர்கள் ஏர் உழும் போது உழவு மாடுகளை அடித்துத் துரத்த பக்கத்தேயிருந்த அன்னப் பறவைகள் அதனால் அஞ்சி அண்மையில் பலாச் சுளைகளின் தேன்பாய முளைத்துள்ள வயல்களில் விரைந்தோட, அவற்றின் முளைகள் சிதையும் என்பது கருத்து. சூல்: கருப்பம்; இங்கு வேர் என்னும் பொருளது, சூல் அடிப் பலா: வேர்ப் பலா. கோல்: தாற்றுக் கோல். இச் செய்யுளில் மருத வளம் கூறப்பெற்றுள்ளது. 40 |