4640. | கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரை வாழ் தடறு தாங்கிய கூன் இளந் தாழையின் மிடறு தாங்கும் விருப்புடைத் தீம் கனி இடறுவார்; நறுந் தேனின் இழுக்குவார். |
(வானர வீரர்) கொடிறு தாங்கிய - கீழ்த் தாடை பொருந்திய; வாய் - அலகாகிய வாயினையுடைய; குழுநாரை - கூட்டமான நாரைகள்; வாழ் தடறு - வசிக்கும் நீர்க்கரைகளில்; தாங்கிய - முளைத்து வளர்ந்துள்ள; கூன் இளந் தாழையின் - வளைந்த இளமையான தென்னை மரத்தின்; மிடறு தாங்கும் - கழுத்துப் பக்கம் சுமந்து கொண்டிருக்கின்ற; விருப்பு உடைத் தீம் கனி - (உண்பவர்க்கு) விருப்பத்தையுண்டாக்குகின்ற பழுத்துக் கீழே உதிர்ந்து கிடக்கும் சுவையான தெங்கம் பழங்களால்; இடறுவார் - கால் இடறித் தடுக்கி விழுவார்கள்; நறுந்தேனின் - (அங்குப் பாயும்) சுவையான தேன் பெருக்கினால்; இழுக்குவோர் - வழுக்கிவிழுவார்கள். வானரவீரர் சோழ நாட்டிற் செல்லும்போது இடைவழியிலே முற்றிக் கீழே வீழ்ந்துள்ள தேங்காய்களினால் காலிடறியும், தேன் பெருக்கால் வழுக்கியும் வருந்திச் சென்றார்கள் என்பது. இச் செய்யுள், தென்னைமர மிகுதியையும், தேன் மிகுதியையும் விளக்குவது. வீறுகோளணி. தாழை -தென்னை. 47 |