4641. | குழுவும் மீன் வளர் குட்டம்எனக் கொளா, எழுவு பாடல் இமிழ் கருப்பு ஏந்திரத்து ஒழுகு சாறு அகன் கூனையின் ஊழ் முறை முழுகி, நீர்க் கருங் காக்கை முளைக்குமே. |
கரு நீர்க் காக்கை - கரிய நிறமுள்ள நீர்க் காக்கைகள்; குழுவும் மீன் - கூட்டமாகத் திரளும் தன்மையுள்ள மீன்கள்; வளர் - வளர்வதற்கு இடமான; குட்டம் எனக் கொளா - சிறு குட்டையென்று நினைத்து; எழுவு பாடல் - (சுருதி கூட்டுவதற்கு) எழுப்புகின்ற பாடல்போல; இமிழ் கரும்பு எந்திரத்து - ஒலிக்கின்ற கரும்பாலையிலிருந்து; ஒழுகு சாறு - பெருகுகின்ற கரும்புச்சாறு (கரும்புப் பால்) நிறைந்த; அகல் கூனையின் - வாய் அகன்ற மிடாவில்; ஊழ்முறை முழுகி - ஒன்றன் பின் ஒன்றாக மூழ்கி; முளைக்கும் - மேலே கிளம்பும். ஏ: ஈற்றசை. ஆலையாடிக் கரும்புச் சாறு நிரம்பிய மிடாவை நீர்க் காக்கைகள் மீன்கள் நிரம்பிய குளங்களென்று மயங்கி அவற்றில் தம் உணவாகிய மீன்களைக் கொத்தித் தின்பதற்காக மூழ்கி மூழ்கி இரை பெறாது வெளிக் கிளம்பும் என்பது. சோழநாட்டின் வளம் புலனாகிறது. இதுவும் மயக்கவணி. கூனை: கரும்புச் சாறு காய்ச்சுவதற்குரிய வாயகன்றகலம். 48 |