4645. | அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு ஒத்திருக்கும் என்றால், உரை ஒக்குமோ - எத் திறத்தினும் ஏழ் உலகம் புகழ் முத்தும் முத் தமிழும் தந்து, முற்றலால்? * |
எத் திறத்தினும் - எல்லாவகையாலும்; ஏழ் உலகும் புகழ் - ஏழு உலகத்தவராலும் புகழப்படுகின்ற; முத்தும் - முத்துக்களையும்; முத் தமிழும் - (இயல் இசை நாடகம் என்னும்) மூவகைத் தமிழையும்; தந்து - கொடுத்து; முற்றலால் - பெருமை பெறுவதால்; அத் திருத் தகு நாட்டினை - செல்வ வளம் பெற்ற அந்தப் பாண்டி நாட்டை; அண்டர் நாடு - தேவலோகமானது; ஒத்திருக்கும் என்றால் - ஒத்திருக்குமென்று கூறினால்; உரை ஒக்குமோ - அந்தச் சொல் பொருந்துமோ? (பொருந்தாது). பாண்டி நாடானது முத்துக்களையும், முத்தமிழாகிய மூவகையமிழ்தத்தையும் தருவதால் ஒருவகையமிழ்தத்தை மட்டுமே கொடுக்கின்ற தேவலோகத்தைப் பாண்டி நாட்டிற்கு ஒப்பாகுமென்று சொல்லுதல் சிறிதும் ஒவ்வாது என்பது. ஏதுவணி. பாண்டியநாடு முத்துக் குளிக்கும் கடல்துறையைக் கொண்டுள்ளமையாலும், தமிழ்ச் சங்கங்களைப் பெற்றிருப்பதாலும் 'முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்' என்றார். 52 |