4647. | வன் திசைக் களிறு அன்ன மயேந்திரக் குன்று இசைத்தது வல்லையில் கூடினார் - தென் திசைக் கடற் சீகர மாருதம் நின்று இசைக்கும் நெடு நெறி நீங்கினார். |
தென் திசைக் கடல் - (வானர வீரர்கள்) தெற்குத் திசையிலுள்ள கடலின்; சீகர மாருதம் - நீர்த் திவலைகளோடு கூடிய காற்று; நின்று இசைக்கும் - இடைவிடாது வீசுகின்ற; நெடு நெறி - (அந்தப் பாண்டிய நாட்டின்) பெருவழிகளை; நீங்கினார் - கடந்தவர்களாய். இசைத்தது - (பலராலும்) சிறப்பித்துக் கூறப்படுவதான; வன் திசைக் களிறு அன்ன - வலிய தென் திசையைத் தாங்கும் யானை போல; மயேந்திரக் குன்று - மயேந்திர மலையை; வல்லையில் கூடினார் - விரைவில் போய்ச் சேர்ந்தார்கள். பாண்டிய நாட்டிற்குச் சென்ற வானரவீரர் தென் கடற்கரையிலுள்ள மயேந்திர மலையைச் சேர்ந்தார்களென்பது. சீகரம்: நீர்த் திவலை. மயேந்திர மலைக்குத் தென்திசைக் களிறாகிய வாமனம் உவமை; அதன் பெருமையாலும், தோற்றத்தாலும், தென் திசையிலுள்ளதாலும் உவமையாயிற்றுஎனலாம். 54 |