சீதையைக் காணாமையால் வானரர் வருந்துதல்

4650.யாவரும் அவ் வயின் எளிதின் எய்தினார்;
பூ வரு புரி குழல், பொரு இல் கற்புடைத்
தேவியைக் காண்கிலார், செய்வது ஓர்கிலார்,
நா உறக் குழறிட நவில்கின்றார்அரோ:   *

     யாவரும் - வானர வீரர் எல்லோரும்; அவ்வயின் எளிதின் எய்
தினார் -
அந்த இடத்திற்கு எளிதாக வந்து சேர்ந்தனர்; பூ வரு புரிகுழல் -
தாமரை மலரில் தோன்றிய (இலக்குமியின் அவதாரமான) சுருண்ட
கூந்தலையும்; பொருவு இல் கற்புடைய - ஒப்பில்லாத கற்புத் தன்மையும்
கொண்ட; தேவியைக் காண்கிலார் - சீதையைக் காணாமல்; செய்வது
ஓர்கிலார் -
இனிமேல் செய்ய வேண்டியது (இன்னதென்று)
அறியாதவர்களாய்; நா உறக் குழறிட - நாக்கு மிகவும் குழற;
நவில்கின்றார்- பேசலானார்கள்.

     பூவரு: மலரைச் சூடிய என்றும், பூமியிலிருந்து தோன்றிய என்றும்
இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.  காண்கிலார், ஓர்கிலார் - எதிர்மறை
முற்றெச்சங்கள்.                                                 3