4651. | 'அற்றது நாள் வரை அவதி; காட்சியும் உற்றிலம்; இராகவன் உயிரும் பொன்றுமால்; கொற்றவன் ஆணையும் குறித்து நின்றனம்; இற்றது நம் செயல், இனி' என்று எண்ணினார். |
வரை நாள் அவதி - (அரசன் நமக்கு) குறித்த தவணையும்; அற்றது - முடிந்து விட்டது; காட்சியும் உற்றிலம் - சீதையைக் காணுகின்ற காட்சியையும் நாம் பெறவில்லை; இராகவன் உயிரும் - (இதையறிந்தால்) இராமனது உயிரும்; பொன்றும் - அழிந்துவிடும்; கொற்றவன் ஆணையும் - அரசனது கட்டளையும்; குறித்து நின்றனம் - மனத்திற் குறித்து நின்றோம்; இனி நம் செயல் இற்றது - இனிமேல் நாம் செய்யக் கூடிய செயலும் இல்லை; என்று எண்ணினார் - என்று கூறி (அந்த வானர வீரர்கள்) பலவாறு சிந்தித்தார்கள். கொற்றவன் ஆணை குறித்தது. முப்பது நாட்கள் கடந்தால் தமக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தால் ஆகும். நம் செயல் இற்றது: தெளிவு பற்றிய காலவழுவமைதி. 4 |