4652.'அருந் தவம் புரிதுமோ?
      அன்னது அன்றுஎனின்,
மருந்து அரு நெடுங்
      கடு உண்டு மாய்துமோ?
திருந்தியது யாது? அது செய்து
      தீர்தும்' என்று
இருந்தனர் - தம்
      உயிர்க்கு இறுதி எண்ணுவார்.

     (கிட்கிந்தைக்கு மீண்டு செல்லாமல் இங்கிருந்தபடியே) அருந்தவம் -
செய்தற்கரிய தவத்தை; புரிதுமோ - செய்வோமோ? அன்னது அன்று
எனின் -
அவ்வாறு செய்ய இயலா விட்டால்; மருந்து அரும் கடு உண்டு -
மாற்ற மருந்து எதுவுமில்லாத கொடிய நஞ்சைக் குடித்து; மாய்துமோ - இறந்து
அழிவோமோ?திருந்தியது யாது - (இந்த இரண்டில்) தகுதியானது எதுவோ;
அது செய்து தீர்தும் -
அதைச் செய்து முடிப்போம்; என்று இருந்தனர் -
என்ற சொல்லி (அந்த மகேந்திர மலையில்) இருந்தவர்கள் (யாவரென்றால்);
தம் உயிர்க்கு -
தம் உயிர்களுக்கும்; இறுதி எண்ணுவார் - ஒரு முடிவைக்
கருதிய அந்த வானரவீர்கள்.

     தவணை நாட்கள் கழிந்த பின்பும் சீதையைக் கண்டுபிடித்தலாகிய
செயலை நிறைவேற்றாது கடுந்தண்டனைதரவுள்ள சுக்கிரீவனை எதிரில்
செல்வதற்கு அஞ்சியவர்களாய் வானரர் இவ்வாறு எண்ணிக் கூறினார்கள்
என்பது.

     மருந்து அரு நெடுங்கடு: முறிவில்லாத நஞ்சு; மாற்று மருந்தில்லாத பெரு
நஞ்சு.  இராமனின் தொண்டில் ஈடுபட்டும் அப் பணியை நிறைவேற்றாது உயிர்
வாழ்வதைவிட,  உயிர் விடுவதே மேல் என்று அந்த வானர வீரர்கள்
கருதினார்கள் என்பது குறிப்பு.                                      5