உடன்வந்தவரிடம் அங்கதன் உரைத்தல் 4653. | கரை பொரு கடல் அயல், கனக மால் வரை நிரை துவன்றிய என நெடிது இருந்தவர்க்கு, 'உரைசெயும் பொருள் உளது' என உணர்த்தினான் - அரசு இளங் கோள் அரி, அயரும் சிந்தையான்: |
அரசு இளங் கோள் அரி - இளவரசனும் சிங்கம் போன்றவனுமான அங்கதன்; அயரும் சிந்தையான் - வருந்திய மனத்தையுடையவனாய்; கரை பொரு கடல் அயல் - கரையை மோதுகின்ற அலை கடலுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில்; கனக மால் வரை - பெரிய மேரு மலைகள்; நிரை துவன்றிய என - வரிசையாய் நெருங்கி நின்றன என்று சொல்லும்படி; நெடிது இருந்தவர்க்கு - மிகுதியாக இருந்த வானர வீரர்களுக்கு; உரை செயும் பொருள் - 'நான் கூறுவதற்குரிய செய்தி; உளது என - ஒன்று உண்டு' என; உணாத்தினான் - கூறலானான். ஒவ்வொரு வானரனும் மேருமலை போன்றுள்ளான் என்பது. வானரர்களைக் கனக மால்வரை நிரை துவன்றிய எனக் கூறியது இல்பொருளுவமையாம். கனகமால் வரை உருவத்தால் வானரர்க்கு உவமையாயிற்று. 6 |