4655. | ' ''செய்தும்'' என்று அமைந்தது செய்த தீர்ந்திலம்; நொய்து சென்று, உற்றது நுவலகிற்றலம்; ''எய்தும் வந்து'' என்பது ஒர் இறையும் கண்டிலம்; உய்தும் என்றால், இது ஓர் உரிமைத்து ஆகுமோ? |
செய்தும் என்று - நாம் செய்வோம் என்று; அமைந்தது - ஏற்றுக் கொண்ட செயலை; செய்து தீர்ந்திலம் - செய்து முடித்தோமல்லோம்; நொய்து சென்று - (குறித்த தவணைக் காலத்திற்குள்) விரைவாகத் திரும்பிச் சென்று; உற்றது நுவலகிற்றிலம் - நிகழ்ந்த வரலாற்றைத் தெரிவிக்கவும் வலியற்றவரானோம்; வந்து எய்தும் என்பது - (தவணை கடந்தாலும்) காரியம் கைகூடும் என்பதை; ஓர் இறையும் கண்டிலம் - ஒரு சிறிதும் அறிந்தோமில்லை (இப்படியிருப்பதால்); உய்தும் என்றால் - உயிரைப் பிடித்துக் கொண்டு நாம் வாழ்வோமென்றால்; இது - அவ்வாறு நாம் உயிர்வாழும் செயல்; ஓர் உரிமைத்து ஆகுமோ - மேற்கொண்ட நட்புக்குத் தகுதியான ஒரு செயலாகுமோ? (ஆகாது). நாம் எண்ணிவந்த செயல் முடிவதற்கு எந்த வகையிலும் சிறிதும் வழியில்லை; தவணைக் காலத்திற்குள் மீண்டு சென்று சேர்தலும் முடியாது; ஆகையால் உயிர்போக்குவதே உறுதியென்று அங்கதன் அறுதியிட்டான் என்பது. நுவலகிற்றிலம்: தன்மைப் பன்மை எதிர்மறை வினைமுற்று; கில் - ஆற்றலையுணர்த்தும் இறந்தகால இடைநிலை. இறை: மிகச்சிறிய. 8 |