சாம்பன் உரை

4657.'விழுமியது உரைத்தனை;-
       விசயம்வீற்றிருந்து,
எழுவொடும் மலையொடும் இகலும்
      தோளினாய்! -
அழுதுமோ, இருந்து? நம்
      அன்பு பாழ்படத்
தொழுதுமோ, சென்று?' எனச்
      சாம்பன் சொல்லினான்:

     சாம்பன் - (அது கேட்டுச்) சாம்பவான்; விசயம் வீற்றிருந்து -
வெற்றிமகன் சிறப்பாக அமைந்திருந்து; எழுவொடும் மலையொடும்
இகலும்-
(தம் உருவத்தாலும், வலிமையாலும்) தூணையும் மலையையும்
பகைக்கும்; தோளினாய்!தோளையுடைய அங்கதனே!விழுமியது
உரைத்தனை -
சிறப்பான சொற்களைச் கூறினாய் (நீ இறந்து போனால்);
இருந்து அழுதுமோ- (நாங்கள்) உயிரோடு இங்கிருந்து அழுது
புலம்புவோமோ? நம் அன்புபாழ்பட - நம் அன்பு அடியோடு
பாழ்படுமாறு; சென்று தொழுதுமோ - மீண்டுபோய்ச் சுக்கிரீவனிடமும்,
இராமனிடமும் உனது செய்கையைத் தொழுதுசொல்வோமோ? எனச்
சொல்லினான் -
என்று கூறினான்.

     நீ இறந்த பிறகு நாங்கள் அழுதுகொண்டிருத்தலும், இங்கிருந்து சென்று
செய்தி கூறுதலும் தகுதியில்லை என்று சாம்பவான் கூறினான் என்பது.  நீ
இறந்த பின்பு நாங்களும் உடனிறவாமல் சென்று செய்தி கூறுவதென்பது
எங்களது அன்பில்லாமையைக் காட்டுமென்பான் 'அன்பு பாழ்படத்
தொழுதுமோ' என்றான்.

     'விசயம் வீற்றிருந்து. . . . . தோளினாய்': இது நீ நல்ல செய்தியோடு
வெற்றியுடன் இராமனிடம் போவாய் என்று குறிப்பு சாம்பன் வாயிலிருந்து
பிறந்தது எனலாம்.  அழுதுமோ, தொழுதுமோ என்பவற்றில் உள்ள ஓகார
வினாக்கள் எதிர்மறைப் பொருளன.                              10