4658. | 'மீண்டு இனி ஒன்று நாம் விளம்ப மிக்கது என்? ''மாண்டுறுவது நலம்'' என வலித்தனம்; - ஆண் தகை அரசு இளங்குமர! - அன்னது வேண்டலின், நின் உயிர்க்கு உறுதி வேண்டுமால்.' |
ஆண்தகை அரசு இளங்குமர - (மேலும் சாம்பவான் அங்கதனை நோக்கி) ஆடவரிற் சிறந்த இளவரசனான அங்கதனே!மீண்டு - திரும்பிச் சென்று; இனி நாம் - இனிமேல் நாங்கள்; ஒன்று விளம்ப மிக்கது என் - சொல்லக் கூடிய செய்தி என்ன உள்ளது? (ஒன்றுமில்லை); மாண்டு உறுவது - (ஆதலால்) நாங்கள் இறந்து விடுவதே; நலம் என வலித்தனம் - நல்லதென்று உறுதி கொண்டோம்; அன்னது வேண்டலின் - அவ்வாறு இறந்து போவதை (நாங்கள்) விரும்பினபடியால்; நின் உயிர்க்கு உறுதி வேண்டும் - உனது உயிர் அழியாமல் இருக்க வேண்டும். சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க மாட்டாமல் நாங்கள் மீண்டுபோய்ச் சொல்வதற்கும் ஒன்றுமில்லை; ஆதலால், நாங்கள் இறந்து விடுவதே தகுதியென்று தோன்றுகிறது; இளவரசனாயிருப்பதால் நீ உயிருடன் வாழ்வது மிக இன்றிமையாததாகுமென்று சாம்பவான் கூறினான் என்பது. ஆல்: ஈற்றசை. 11 |