அங்கதன் மறுமொழி

4659. என்று அவன் உரைத்தலும்,
      இருந்த வாலி சேய்,
'குன்று உறழ்ந்தென வளர்
      குவவுத் தோளினீர்!
பொன்றி நீர் மடிய,
      யான் போவெனேல், அது
நன்றதோ? உலகமும்
      நயக்கற்பாலதோ?

     என்று அவன் உரைத்தலும் - இவ்வாறு சாம்பவான் கூறியதும்; இருந்த
வாலி சேய் -
அதனைக் கேட்டிருந்த வாலி மகனான அங்கதன்; குன்று
உறழ்ந்தென -
மலைகள் ஒப்பானவை என்று சொல்லும்படி; வளர் குவவுத்
தோளினீர் -
வளர்ந்துள்ள திரண்டு தோள்களையுடையவர்களே!நீர் பொன்றி
மடிய -
நீங்கள் யாவரும் இங்கே இறந்தொழிய; யான் போவனேல் -
நான்மட்டும் உயிரோடு தனியே திரும்பிப் போவேனானால்; அது நன்றதோ -
அச் செயல் நல்லதாகுமோ?உலகமும் - உலகில் வாழும் சான்றோராலும்;
நயக்கற்பாலதோ -
விரும்பத் தக்கதாகுமோ? (ஆகாது).

     நன்றது: 'அது' பகுதிப் பொருள் விகுதி.  'நீங்கள் அனைவரும் மடிய
நான் மட்டும் திரும்பிச் செல்வது நல்லதா? அதை உலகத்தவர்தான்
விரும்புவார்களோ?' என்று அங்கதன் கேட்டான் என்பது.              12