4660.'  ''சான்றவர் பழி உரைக்கு
      அஞ்சித் தன் உயிர்
போன்றவர் மடிதர,
     போந்துளான்'' என
ஆன்ற பேர் உலகு உளோர்
      அறைதல் முன்னம், யான்
வான் தொடர்குவென்' என
      மறித்தும் கூறுவான்:

     சான்றவர் பழியுரைக்கு அஞ்சி - சான்றோர்கள் கூறும் பழிச்
சொல்லுக்கு அஞ்சி; தன் உயிர் போன்றவர் - தன் உயிரையொத்த
நண்பர்கள் யாவரும்; மடிதர - இறந்துபோகவும்; போந்துளான் என -
(இவன் மட்டும் இறவாமல் உயிருடன்) வந்து சேர்ந்துள்ளானென்று; ஆன்ற
பேருலகு உளோர் -
உயர்ந்த உலகிலுள்ள பெரியோர்; அறைதல் முன்னம்
-
(பழித்துக்) கூறுவதற்கு முன்பே; யான் வான் தொடர்குவென் - நான்
இறந்து மேலுலகம் செல்வேன்; என - என்று சொல்லி; மறித்தும் கூறுவான் -
மீண்டும் கூறலாயினான்.

     மீண்டு சென்றால் வீண்பெருமை கூறி ஏற்றுக் கொண்ட செயலை
முடிக்காமல் வெறுங்கையோடு மீண்டார்களே' என்று பெரியோர் கூறும் பழிச்
சொல்லுக்கு அஞ்சி உயிர்போன்ற நண்பர் யாவரும் உயிர்விடவும்
இவன்மட்டும் அச்சம் சிறிதுமின்றி மீண்டான் என்ற உலகத்தவரின் பழிச்
சொல்லுக்குச் சிறிதும் இடமில்லாமல் முன்னரே மாய்ந்தொழிவேன் என்று
அங்கதன் கூறினான் என்பது.

     மடிதரல்: தரல் - துணைவினை.  வான் தொடர்குவென்: இறந்தவர்
வானுலகம் செல்வர் என்ற மரபுபற்றி வந்த வழக்கு.                   13