அறுசீர் ஆசிரிய விருத்தம்

4661.'எல்லை நம் இறுதி,
      யாய்க்கும் எந்தைக்கும், யாவரேனும்
சொல்லவும் கூடும்; கேட்டால்,
      துஞ்சவும் அடுக்கும்; கண்ட
வில்லியும் இளைய கோவம் வீவது
      திண்ணம்; அச் சொல்
மல்லல் நீர் அயோத்தி புக்கால்,
      வாழ்வரோ பரதன் மற்றோர்?

     (நாம் எல்லோரும் இங்கே இறந்துவிட்டால்) நம் இறுதி எல்லை -
இறத்தலாகிய நமது முடிவுச் செய்தியை; யாய்க்கும் - என்தாயாகிய
தாரைக்கும்; எந்தைக்கும் - என் சிறிய தந்தையான சுக்கிரீவனுக்கும்;
யாவரேனும் -
 யாரேனும் ஒருவர்; சொல்லவும் கூடும் - போய்ச்
சொல்லவும் இடம் ஏற்படும்; கேட்டால் - (அதனைக்) கேட்டறிந்தால்;
துஞ்சவும் அடுக்கும் -
அவர்கள் மாண்டுபோகவும் கூடும்; கண்ட -
(அத்துயர நிகழ்ச்சியை) நேரில் பார்த்த; வில்லியும் - வில் வீரனான
இராமபிரானும்; இளைய கோவும் - இளைய பெருமாளான இலக்குவனும்;
வீவது திண்ணம் -
இறந்துபோவது உறுதி; அச்சொல் -
(இராமலக்குவர் இறந்த) அந்தச் செய்தி; மல்லல் நீர் அயோத்தி புக்கால் -
வளம் பொருந்திய நீர் நீறைந்த அயோத்தி நகருக்கு எட்டினால்; பர தன்
மற்றோர் -
பரதனும் அங்குள்ள மற்றவரும்; வாழ்வரோ - உயிர்
வாழ்வார்களோ?

     நமது முடிவைத் தாரையும சுக்கிரீவனும் மற்றவரால் அறிவார்கள்.
அதனால் அவர்க்கும் இராமலக்குவர்க்கும், பரதன் முதலியோர்க்கும்
மரணமுண்டாகலாம் என வருந்தினான் அங்கதன் என்பது.

     'சாதலை'த் 'துஞ்சுதல்' என்றது மங்கலவழக்கு.                  14