சாம்பவான் அங்கதனை நோக்கிக் கூறல் 4663. | பொருப்பு உறழ் வயிரத் திண் தோள் பொரு சினத்து ஆளி போல்வான் தரிப்பு இலாது உரைத்த மாற்றம், தடுப்ப அருந்தகைத்தது ஆய நெருப்பையே விளைத்த போல, நெஞ்சமும் மறுகக் கேட்டு, விருப்பினால் அவனை நோக்கி, விளம்பினன் எண்கின் வேந்தன்: |
பொருப்பு உறழ் - மலையையொத்த; வயிரத் திண் தோள் - உறுதியான வலிய தோள்களையுடைய; பொரு சினத்து ஆளி போல்வான் - போர் புரியும் கடுங்கோபத்தைக் கொண்ட சிங்கம் போன்றவனாகிய அங்கதன் - தரிப்பு இலாது - மனம்பொறாமல்; உரைத்த மாற்றம் - சொன்ன சொற்கள்; தடுப்ப அருந் தகைத்ததாய - தடுக்க முடியாத தன்மை பொருந்திய; நெருப்பையே விளைத்த போல - பெருந்தீயை மூட்டியது போல; நெஞ்சமும் மறுக - மனத்தையும் கலங்கச் செய்ய; கேட்டு - (அதனைக்) கேட்டு; எண்கின் வேந்தன் - கரடிகளின் அரசனான சாம்பவான்; விருப்பினால் அவனை நோக்கி - அன்போடு அந்த அங்கதனைப் பார்த்து; விளம்பினான் - கூறலானான். யாளி என்பது ஆளி என்றாயிற்று. 16 |