அனுமன் கூற்று 4666. | அவன் அவை உரைத்தபின், அனுமன் சொல்லுவான்: 'புவனம் மூன்றினும் ஒரு புடையில் புக்கிலம்; கவனம் மாண்டவர் என, கருத்திலார் என, தவன வேகத்தினீர்! சலித்திரோ?' என்றான். |
அவன் அவை உரைத்தபின் - அந்தச் சாம்பவான் அவ்வாறு உரைத்தபின்னால்; அனுமன் சொல்லுவான் - அனுமன் கூறுவான்; தவன வேகத்தினீர் - சூரியன் போன்ற வேகத்தையுடையவர்களே!புவனம் மூன்றினும் - (நாம் சீதையை) மூன்று உலகங்களிலும்; ஒரு புடையில் புக்கிலம் - ஒரு பக்கத்தில் கூட (நாம்) முழுவதும் போய்த் தேடிப் பார்க்க வில்லை (அப்படியிருக்க); கவனம் மாண்டவர் என - செல்லும் வேகம் குறைந்தவர்போலவும்; கருத்து இலார் என - (நாம் மேற்கொண்ட செயலைப் பற்றி) எண்ணிப்பார்க்கும் திறமில்லாதவர் போலவும்; சலித்திரோ - சலிப்படைந்து விட்டீரோ? என்றான் - என்று கேட்டான். தேட வேண்டிய இடம் இன்னும் மிகுதியாக இருக்கவும், சிறிது தேடியதும் சீதை கிடைக்காததைக் கொண்டே முழுவதும் திரிந்து அலைந்து சலிபபடைந்தவர் போல நீங்கள் ஒரு சிறிதும் ஆலோசனையில்லாமல் வெறுப்படைந்து உயிர்விடத் துணிவது சிறிதும் தகுதியில்லை என்று அனுமன் கூறினான். வலிமையிருந்தும் எதிலும் கருத்தில்லையென்றால் உங்கள் வீரத் தன்மைக்கும் நேர்மைக்கும் குறைவாகுமென அனுமன் இடித்துரைத்தான். கமனம்: செல்கை. தபனன்: வெப்பத்தால் வேகச் செய்பவன், சூரியன் (கமனம், தபனன் என்றவடமொழிச் சொற்கள் இங்கே கவனம், தவனன் எனத் திரிபுற்றன). 19 |